கோவையில் ரூ.24 கோடியில் சீரமைக்கப்படும் குளங்கள்
கோவை மாநகரில் ரூ.24 கோடியில் முத்தண்ணன், செல்வாம்பதி குளங்கள் சீரமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை,
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட 8 குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் கழிவு நீர் தேங்குவதால் மாசடைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியின் கீழ் உள்ள முத்தண்ணன், செல்வாம்பதி குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் முத்தண்ணன் குளம், செல்வாம்பதி குளம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளன. இவற்றின் மொத்த பரப்பளவு 145 ஏக்கர் ஆகும். தற்போது இந்த குளங்களை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக செல்வாம்பதி குளத்தின் கரைகளில் வளர்ந்திருந்த கருவேலம் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
இதனை தொடர்ந்து குளக்கரைகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் பலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை ஆர்.எஸ்.புரம் அருகில் செல்வாம்பதி, முத்தண்ணன் ஆகிய குளங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்த குளங்களை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில் இருந்து இந்த குளத்தில் வளர்ந்துள்ள ஆகாய தாமரைகள் அகற்றப்படும்.
மேலும் குளக்கரைகளில் குவிந்துள்ள குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைபடுத்தப்படும். இதனை தொடர்ந்து குளக்கரைகள் மற்றும் சரிவுகளில் அழகான புல்வெளி அமைக்கப்பட்டு, அதில் பொதுமக்கள் அமர்ந்து குளத்தின் அழகை கண்டு ரசிக்க இருக்கைகள், நிழற்குடைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
இதுதவிர சிறிய பூங்காக்கள், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, சைக்கிள் சவாரி மேற்கொள்ள தனியாக பாதை அமைக்கப்படும். மேலும் இரவு நேரத்தில் ஜொலிக்கும் வகையில் கரைகளில் அலங்கார விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. இதுதவிர இங்கு சிற்றுண்டி கடைகள் அமைக்கும் திட்டமும் உள்ளன.
இதனை தொடர்ந்து கிருஷ்ணாம்பதி குளம் ரூ.14 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக குளக்கரையை நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவு பெற்றதும், அந்த குளத்தை மேம்படுத்தும் பணி தொடங்கப்படும்.