ஆண்டிப்பட்டி அருகே, மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பலி - மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது
ஆண்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பலியானார்.
கடமலைக்குண்டு,
தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 36). இவர், நாம் தமிழர் கட்சியின் கடமலை-மயிலை ஒன்றிய தலைவராக பதவி வகித்து வந்தார். அவர், நாம் தமிழர் கட்சி சார்பில் கடமலை-மயிலை ஒன்றிய 10-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டார். இங்கு முதல் கட்டமாக கடந்த 27-ந்தேதி தேர்தல் நடந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை ஆண்டிப்பட்டி அருகே உள்ள மஞ்சனூத்து கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் குபேந்திரன் சென்று கொண்டிருந்தார். அவருடன் மஞ்சனூத்து கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரும் சென்றார். மோட்டார் சைக்கிளை குபேந்திரன் ஓட்டினார்.
கோரையூத்து என்னுமிடத்தில் சென்றபோது எதிரே காய்கறி ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட குபேந்திரன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற முருகன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த மயிலாடும்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குபேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசரடி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் தங்கவேல் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த குபேந்திரனுக்கு தங்கபாண்டியம்மாள் என்ற மனைவியும், கதிரவன், கருண் என்ற 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.