மாவட்டத்தில், நாளை 10 இடங்களில் வாக்கு எண்ணிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) 10 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Update: 2019-12-31 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. இதில் 23 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 219 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், 326 கிராம ஊராட்சி மன்றத்தலைவர்கள், 2,221 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது.

இதில் பதிவான வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டியை மூடி, முத்திரையிட்டு, அந்தந்த ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வாக்குப்பெட்டிகளை வைத்து, அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா

இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) காலை வாக்குகள் எண்ணும் பணி தொடங்க உள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது. முதல் கட்டமாக தேர்தல் நடந்த ஓசூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மத்தூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகிறது. தளி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை தளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஊத்தங்கரை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகிறது.

ஏற்பாடுகள் தீவிரம்

இதேபோல், பர்கூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியிலும், கெலமங்கலம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் எண்ணப்படுகிறது. கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், சூளகிரி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்