தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது: பா.ம.க. கூட்டணியில் இல்லாவிட்டால் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்காது

தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது. பா.ம.க. கூட்டணியில் இல்லாவிட்டால் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்காது என்று திண்டிவனத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

Update: 2019-12-31 22:30 GMT
திண்டிவனம்,

புத்தாண்டு தினத்தையொட்டி பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் நடைபெற்றது. இதற்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், இணை பொதுச்செயலாளர் இசக்கி படையாட்சி, அரசியல் குழு தலைவர் தீரன், முன்னாள் மத்திய மந்திரிகள் ஏ.கே.மூர்த்தி, வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பா.ம.க.வினர் உழைக்கின்ற உழைப்பு 80 தொகுதிகளில் 80 லட்சம் வாக்குகளை பெறக்கூடிய நிலையை ஏற்படுத்தி தர வேண்டும். அப்படி வாக்குகளை பெற முடிந்தால் பா.ம.க. ஆளும் கட்சியாக மாறும். அன்புமணியின் முப்படைகளின் வேலையே ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு லட்சம் வாக்குகளை பெற வேண்டும்.

உறுப்பினர் சேர்க்கை சேர்த்தது போல் இல்லாமல் உண்மையான வாக்காளர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் பா.ம.க. ஆட்சியில் அமர முடியும். கட்சியின் பொறுப்புகளில் உள்ளவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். கட்சியின் திட்டங்களை தயாரிக்க 3 பேர் கொண்ட குழுவை பா.ம.க. மாநில தலைவர் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது. அதில் மாற்றுக்கருத்து கிடையாது. நாம் கூட்டணிக்கு சென்றாலும், நமது கொள்கையில் எள்ளளவு கூட பின்வாங்கவில்லை. பின்வாங்க போவதும் இல்லை. கூட்டணியே வேண்டாம் என்ற கொள்கையை மாற்றி, நாம் கூட்டணிக்கு சென்றோம். ஆனால் அதை கூட அங்கீகாரம் செய்யவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.

நாம், அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரவில்லை என்றால், இன்று அ.தி.மு.க. ஆட்சியே இல்லை. தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.விற்கு விட்டுக்கொடுத்தோம். அவர்கள் ஆட்சியை பிடிக்க வேண்டும், ஆட்சியை தொடர வேண்டும் என்றார்கள். அதனால் விட்டுக்கொடுத்தோம். ஆனால் நாங்கள் கேட்டது, கட்சியில் உழைக்கிறவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவி கொடுங்கள் என்றோம். ஆனால் குறைந்த அளவே கொடுத்திருக்கிறார்கள். ஆளும் கட்சியின் தலைமை எங்களது கருத்துகளையெல்லாம் ஏற்று, இனி வரும் காலங்களில் அதை சரிசெய்ய வேண்டும் என்று எனது அன்பான வேண்டுகோளை இந்த பொதுக்குழு மூலம் வைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை செயல்படுத்த கூடாது. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும். அதற்கான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது காலவரையற்ற பரோல் வழங்க வேண்டும், புதுச்சேரிக்கு முழுமையான மாநில தகுதி வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்