மராட்டிய மாநில அரசுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா கண்டனம் “ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக்கொடுக்க முடியாது”

பெலகாவியை சொந்தம் கொண்டாடுவதா என மராட்டிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.;

Update:2019-12-31 05:56 IST
பெங்களூரு,

கர்நாடகம்-மராட்டிய மாநிலங்களின் எல்லையில் பெலகாவி மாவட்டம் அமைந்துள்ளது. மொழி அடிப்படையில் அந்த மாவட்டம் தங்களுக்கு சேர்ந்தது என்று மராட்டிய மாநிலம் கூறி வருகிறது. இதனால் இருமாநிலம் இடையே பெலகாவி யாருக்கு சொந்தம் என்பதில் நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது.

பெலகாவி கர்நாடகத்தை சேர்ந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்த போது பெலகாவியில் சுவர்ணசவுதா (சட்டசபை கட்டிடம்) ஒன்று கட்டப்பட்டது. அங்கு ஆண்டுதோறும் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் புதிதாக சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு அமைந்துள்ளது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, கர்நாடகத்தில் உள்ள பெலகாவி, மராட்டியத்திற்கு சொந்தம் என்று கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கர்நாடக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த மாநில முதல்-மந்திரியை கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடகத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மகாஜன் அறிக்கையில், கர்நாடகம் மற்றும் மராட்டிய மாநிலத்திற்கு எந்ததெந்த பகுதிகள் சேர வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மராட்டிய முதல்-மந்திரி, பெலகாவி விவகாரம் பற்றி பேசி கர்நாடகம் மற்றும் மராட்டிய மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.

இதை நான் கண்டிக்கிறேன். கர்நாடகத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட விட்டுக்கொடுக்க முடியாது. நமது மக்கள் சகோதரத்துவத்துடன் அமைதி காக்க வேண்டும் என்று கர்நாடக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஒருவர் கூறிவிட்டார் என்பதற்காக குழப்பத்தை ஏற்படுத்த தேவை இல்லை.

கன்னடர்களின் நலனை பாதுகாக்க எங்கள் அரசு தயாராக உள்ளது. நிலம், நீர், மொழி விஷயங்களில் சமரசத்திற்கு இடமில்லை. இதில் யாருக்கும் சிறிதும் சந்தேகம் வேண்டாம். கன்னடர்களின் நலனை பலிகொடுத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பெலகாவி எல்லை பிரச்சினை முடிந்துபோன விவகாரம். ஆனால் மராட்டிய அரசியல்வாதிகள், இந்த விஷயத்தை முன்வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார்கள்.

அண்டை மாநிலங்களின் நிலத்தை கர்நாடகம் அபகரித்துக்கொள்ளவில்லை. மராட்டிய முதல்-மந்திரி எந்த அர்த்தத்தில் பேசுகிறார் என்று தெரியவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க பிரதமர் மோடி முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், கூட்டாட்சி தத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மராட்டியம் எல்லை பிரச்சினையை உருவாக்குவது சரியல்ல. இத்தகைய முயற்சியில் யாரும் ஈடுபடக்கூடாது.

ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் கபாலிபெட்டாவில் இயேசு கிறிஸ்து சிலையை அமைக்க முடிவு செய்திருப்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அறிக்கை வந்த பிறகு உரிய முடிவு எடுக்கப்படும். அரசு நிலத்தில் இயே-சு கிறிஸ்து சிலையை நிர்வகிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கர்நாடகம்- மராட்டியம் இடையே பெலகாவி எல்லை பிரச்சினை தீவிரம் அடைந்துள்ளது. மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் சிவசேனா கட்சியினர் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பதிலுக்கு கன்னட அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து கர்நாடகம்-மராட்டியம் இடையே அதாவது பெலகாவியில் இருந்து கோலாப்பூருக்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பஸ்களின் போக்குவரத்து நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் நேற்று பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இருமாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்