தேவகோட்டை அருகே, தெப்பக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

தேவகோட்டை அருகே தெப்பக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியாயினர்.;

Update: 2019-12-30 22:45 GMT
தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் சந்துரு (வயது17). செக்காலையைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சுப்பிரமணியன் (17). இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.செக்காலையைச் சேர்ந்த ராம கிருஷ்ணன் மகன் லட்சுமணன் (17) மற்றொரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் 3 பேரும் சேர்ந்து தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர்.

பின்னர் அங்குள்ள கோவில் தெப்பக்குளத்தில் 3 பேரும் குளித்தனர். அப்போது சந்துருவும், சுப்பிரமணியனும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமணன், சத்தம் போட்டுள்ளார்.

இதையறிந்த அக்கம்பக்கத்தினர் குளத்தில் குதித்து 2 பேரையும் தேடினர்.

இதில் அவர்கள் 2 பேரையும் பிணமாகவே மீட்க முடிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆறாவயல் போலீசார் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 மாணவர்களின் உடல்களையும் பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்