மதுபோதையில் விபரீதம் விஷ மாத்திரை தின்று விட்டு காப்பாற்றுமாறு மனைவியிடம் கெஞ்சிய தொழிலாளி சாவு

மார்த்தாண்டம் அருகே ‘விஷ மாத்திரை தின்று விட்டேன்' என கூறிய தொழிலாளி, தன்னை காப்பாற்றுமாறு மனைவியிடம் கெஞ்சினார். ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-12-30 22:30 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி வாளைவிளையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவர் திக்குறிச்சி நெல்லிக்காவிளையில் உள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி நிர்மலா (47). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் 2 பேரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்கள்.

ராஜேந்திரன் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி நிர்மலாவிடம் தகராறு செய்வாராம்.

விஷ மாத்திரை தின்றார்

அந்த சமயத்தில், இந்த உலகத்தில் இருப்பதை விட சாவதே மேல் என்று சொல்வாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் ராஜேந்திரன் வழக்கம் போல் மதுபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த மனைவியிடம், ஒருவித பதற்றத்துடன் பேசியுள்ளார். அதாவது, மதுபோதையில் விஷ மாத்திரை தின்று விட்டேன், செத்து விடுவேன் போல் இருக்கிறது. எனவே, தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சினார். அதே சமயத்தில், அங்கேயே திடீரென மயங்கியும் விழுந்தார்.

சாவு

உடனே நிர்மலா, தன்னுடைய தம்பி விஜயகுமாருடன் சேர்ந்து கணவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக நிர்மலா கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மதுபோதையில் விஷ மாத்திரை தின்று விட்டு, தன்னை காப்பாற்றுமாறு மனைவியிடம் கெஞ்சிய தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்