குளித்தலை பகவதி அம்மன்-கருப்பண்ணசாமி கோவில் திருவிழா

குளித்தலை பகவதி அம்மன்-கருப்பண்ணசாமி கோவில் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Update: 2019-12-30 22:30 GMT
குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை பகவதி அம்மன் கோவில் தெருவில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன்-கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி கடந்த 23-ந்தேதி முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. தொடர்ந்து திருவிழாவின் முதல் நாளான கடந்த 27-ந்தேதி இரவு கடம்பவனேசுவரர் காவிரி நதிக்கரையில் இருந்து அம்மன் புறப்பாடு நடைபெற்று, வீதி உலா நடைபெற்றது. அப்போது ஏராளமானோர் இளநீரை கொண்டு சாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

கடந்த 28-ந்தேதி சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. பின்னர் நேற்று முன்தினம் இரவு பகவதி அம்மன் கோவிலில் இருந்து சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகம் எடுக்கப்பட்டது. சாமி கரகம் மற்றும் கருப்பண்ணசாமியின் சூலம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பூசாரிகள் சபாபதிநாடார் தெரு, பஸ்நிலையம், வைசியாள் தெரு வழியாக பெரியபாலத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.

திரளான பக்தர்கள்

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு குளித்தலை கீழமுதலியார் தெரு, கம்மாளர் தெரு, கடம்பவனேசுவரர் கோவில் உள்ளிட்ட முக்கிய தெருக்கள் வழியாக வீதிஉலா நடைபெற்றது. அப்போது பொதுமக்கள், சாமிக்கு மாவிளக்கு போட்டும், சிறப்பு அர்ச்சனைகள் செய்தும் வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு மீண்டும் பகவதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் கரக வீதிஉலா நேற்று காலை பகவதி அம்மன் கோவிலில் குடிபுகுந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதையடுத்து மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெறும் இந்தகோவில் திருவிழா கடைசி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) விடையாற்றி விழாவுடன் நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்