2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: கரூர் மாவட்டத்தில் 85.55 சதவீதம் ஓட்டுப்பதிவு

கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 85.55 சதவீதம் ஓட்டுப்பதிவானது. இது தமிழகத்திலேயே அதிக பட்ச வாக்குப்பதிவாகும்.

Update: 2019-12-30 23:00 GMT
குளித்தலை,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்பேரில் கரூர் மாவட்டத்தில் கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய 4 ஒன்றியங்களில் கடந்த 27-ந்தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதைத்தொடர்ந்து குளித்தலை, கடவூர், தோகைமலை, கிரு‌‌ஷ்ணராயபுரம் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு நேற்று 2-ம் கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்காக மொத்தம் 474 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் 6 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 61 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 73 கிராம ஊராட்சி தலைவர்கள், 539 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 679 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

சரியாக காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடி களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 15.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. கிரு‌‌ஷ்ணராயபுரம், குளித்தலை ஒன்றியத்தில் ஆண்களை விட பெண்களே வாக்கு செலுத்த ஆர்வமாக வந்திருந்தனர். வாக்குச்சாவடிகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக வரிசை அமைக்கப்பட்டிருந்தது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்தது.

திருநங்கைகள் வாக்கு செலுத்தினர்

கிரு‌‌ஷ்ணராயபுரம் ஒன்றியம் மேட்டாங்கிணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உடல் நிலை சரியில்லாத தனது தாத்தா நடராஜனை (80), மணவாசியை சேர்ந்த இளம்பெண் ஆனந்தி (20) அழைத்து வந்து தனது முதல் வாக்கினை செலுத்தினார். மணவாசி தெற்கு தெருவை சேர்ந்த மாரிமுத்துவுக்கு (60) கண்பார்வை குறைபாடு இருந்ததால் உறவினர்களால் காரில், மணவாசி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு வாக்கு செலுத்த, வாக்குச்சாவடி அலுவலர்கள் உதவி செய்தனர். இதே போல் அந்த வாக்குசாவடியில் ஜானகி (95), அழகம்மாள் (95) உள்ளிட்ட மூதாட்டிகள் காரில் வந்து வாக்கினை செலுத்தி சென்றனர்.

கிரு‌‌ஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மட்டும் 43 திருநங்கைகளுக்கு ஓட்டு உள்ளது. அவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் பூத் சிலிப்பினை எடுத்து கொண்டு மணவாசி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு கூட்டமாக வந்தனர். பின்னர் மக்களோடு மக்களாக அவர்களும் வரிசையில் நின்று வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினர். பின்னர் வெளியே வந்ததும், செல்போனில் செல்பி எடுத்தும், குத்தாட்டம் போட்டும் வாக்கு செலுத்திய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

போலீசார் பாதுகாப்பு

விறுவிறுப்பாக சென்ற வாக்குப்பதிவானது காலை 11 மணி நிலவரப்படி 33.57 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 53.69 சதவீதமும், மதியம் 3 மணி நிலவரப்படி 70.72 சதவீதமும் பதிவாகியிருந்தன. மணவாசி, மாயனூர், ஆண்டிபாளையம், மேட்டாங்கிணம் உள்ளிட்ட இடங்களில் வாக்குச்சாவடிகளின் அருகே நின்று கொண்டிருந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்களை, கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் ரோந்து சென்ற போது கண்காணித்து போலீசார் மூலம் அவர்களை அப்புறப்படுத்தினர். மொத்தம் 914 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகளை தேர்தல் பார்வையாளர் வெங்கடாசலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

85.55 சதவீதம் வாக்குப்பதிவு

கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கடவூர், தோகைமலை, கிரு‌‌ஷ்ணராயபுரம் ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. மாலை 5 மணியளவில் வாக்குப்பதிவுக்கான நேரம் முடிவடைந்த போதிலும், சில வாக்காளர்கள் வரிசையில் இருந்ததால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டனர். முடிவில் குளித்தலை உள்பட 4 ஒன்றியங்களிலும் சேர்த்து 85.55 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. 4 ஒன்றியங்களிலும் சேர்த்து நேற்று நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 1,16,999 ஆண்கள், 1,21,236 பெண்கள், 30 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,38,265 பேர் வாக்களித்துள்ளனர். இதற்கிடையே வாக்குப்பதிவு முடிவடைந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டது. பின்னர் வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் வாக்கு எண்ணும் மைய அறையில் அவை பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

தமிழகத்திலேயே அதிக வாக்குகள்

குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்கு குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், கிரு‌‌ஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு புலியூர் ராணி மெய்யம்மை மெட்ரிக்குலேசன் பள்ளியும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு மாரிஸ்ட் மேல்நிலைப்பள்ளியும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு செர்வைட் மகளிர் கல்வியியல் கல்லூரியும் வாக்கு எண்ணும் மையங்களாக உள்ளன. இந்த நிலையில் குளித்தலை உள்பட 4 ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவுக்கு பிறகு, வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. கரூர் மாவட்டத்தில் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 82.54 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. நேற்று நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 85.55 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. தமிழகத்திலேயே கரூர் மாவட்டத்தில் அதிக வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்