திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் கூட்டணியை உருவாக்க முயற்சி அர்ஜூன் சம்பத் பேட்டி

திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் கூட்டணியை உருவாக்க முயற்சி எடுத்து வருவதாக அர்ஜூன் சம்பத் கூறினார்.

Update: 2019-12-30 23:15 GMT
கும்பகோணம்,

இந்திய தேசிய கீதத்தை பாட மாட்டோம் என கூறிய எஸ்.டி.பி.ஐ. அமைப்பை சேர்ந்தவர்கள் தற்போது தேசிய கீதத்தை பாடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பிரதமர் மோடி, அமித்‌ஷா ஆகியோருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இத்தகைய போராட்டத்தை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது.

போராட்டக்காரர்கள் மாற்று கருத்தை தெரிவிக்கலாம். தற்போது தேசிய கீதத்தை பாடியும், தேசிய கொடியை ஏந்தியும், காந்தி உருவ படத்தை வைத்துக்கொண்டும், நூதன முறையில் கோலம் போட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன்.

ஆன்மிக அரசியல் கூட்டணி

தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு இந்து மக்கள் கட்சி முயற்சி எடுத்து செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சையில் வருகிற பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் ஆன்மிக அரசியல் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள், ஆன்மிக அரசியல் கட்சியினர் ஓரணியில் திரள உள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துர்கா ஸ்டாலின், ரஜினிகாந்த், ஜி.கே.வாசன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு தமிழகத்தில் ஆன்மிக அரசியல் மாற்றம் ஏற்பட வித்திட வேண்டும் என்பதே இந்து மக்கள் கட்சியின் வேண்டுகோள்.

சிதம்பரத்தின் பங்கு

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய அளவில் போராட்டங்கள் நடைபெறவில்லை. 4 முஸ்லிம் பல்கலைக்கழகங்கள், ஒரு கம்யூனிஸ்டு பல்கலைக்கழகம் ஆகியவையே போராட்டத்தை தூண்டின. இந்த போராட்டம் உடனடியாக முறியடிக்கப்பட்டு விட்டது. அவர்களது பொய் பிரசாரமும் முறியடிக்கப்பட்டு விட்டது.

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை மன்மோகன்சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் முன்பு ஆதரித்துள்ளார்கள் என்பது உண்மை. தேசிய குடியுரிமை பதிவேடு என்பது இந்திய நாட்டிற்கு தேவை என சிதம்பரம் பேசி உள்ளார். தேசிய குடியுரிமை பதிவேட்டை தயார் செய்வதில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது அவரது பங்கு பெரும் பங்காக இருந்துள்ளது.

கும்பாபிஷேகத்துக்கு நிதி

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்திற்கு போதுமான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் தஞ்சை பெரிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதை தமிழகம் முழுவதும் பெரிய திருவிழாவாக நடத்தப்பட வேண்டும்.

தஞ்சை பெரிய கோவிலுக்கு ராஜராஜ சோழன் எவ்வாறு கும்பாபிஷேகம் நடத்தினாரோ அதே முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் குருமூர்த்தி, மாவட்ட தலைவர் ராஜ்குமார், கோவில் பாதுகாப்பு பிரிவு தலைவர் வைரவேல், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சேகர், மாவட்ட செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்