குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க. மகளிரணியினர் வீட்டின் முன்பு கோலம் போட்டு போராட்டம்
கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மகளிரணியினர் தங்கள் வீட்டின் முன்பு கோலம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கோவை மாவட்டத்திலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சென்னையில் கோலம்போட்டு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து தி.மு.க. மகளிரணி சார்பில் கோலம் போட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி தலைமையில் கோவையை அடுத்த சுண்டப்பாளையத்தில் கோலம் போடும் போராட்டம் நடந்தது. இதில் மகளிரணியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்களது வீட்டின் முன்பு குடியுரிமை திருத்த சட்டம் வேண்டாம், தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம் என்று ஆங்கிலத்தில் எழுதி கோலம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தி.மு.க. மகளிரணியை சேர்ந்தவர்கள் கூறும்போது, குடியுரிமை திருத்த சட்டத்தால் ஈழத்தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே எங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகளின் வாசலில் கோலம் போட்டு போராட்டம் நடத்தி வருகிறோம்.
மத்திய அரசு இந்த சட்டத்தை வாபஸ் பெறும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.