ஆண்டிப்பட்டி பகுதியில், பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

ஆண்டிப்பட்டி பகுதியில் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2019-12-30 22:00 GMT
ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த பகுதியில் விளையும் பப்பாளி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தால் இப்பகுதியில் பப்பாளி மரங்களை அகற்றிவிட்டு மாற்று விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்தது. இதனால் தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனையடுத்து திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், கொத்தபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மீண்டும் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பப்பாளியின் விலையும் உயர்ந்து காணப்படுவதால் பப்பாளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது சந்தையில் ஒரு கிலோ பப்பாளி ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பப்பாளி சராசரியாக 2 கிலோ எடை கொண்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே நேரம் பப்பாளி மரங்களில் வைரஸ் தாக்குதலால் இலைகள் அனைத்தும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதாகவும், இதைத்தடுக்க தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்