பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை- அடுப்புகள் தயார் செய்யும் பணி மும்முரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏர்வாடி அருகே மாவடியில் மண்பானைகள், அடுப்புகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.
ஏர்வாடி,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏர்வாடி அருகே மாவடியில் மண்பானைகள், அடுப்புகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.
மண்பானைகள்
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள மாவடியில் குடிசை தொழிலாக வீடுகளில் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறிய பானை முதல் பெரிய பானை வரை பல்வேறு வடிவங்களில் தயார் செய்து வருகின்றனர். இதுபோல் பொங்கலிடுவதற்கு தேவையான மண்ணால் ஆன அடுப்புகளும், பானை மூடிகளும் கூட உற்பத்தி செய்து வருகின்றனர்.
குளங்களில் இருந்து சேகரித்து வந்த மண் மூலம் பானை, அடுப்புகள் தயார் செய்யப்படுகிறது. 50 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை பானைகளும், 60 ரூபாய் முதல் 350 ரூபாய் வரையிலான அடுப்புகளும் விற்பனைக்கு உள்ளது.
ஊக்குவிக்க வேண்டும்
இந்த பானைகள், அடுப்புகள் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மண்பாண்ட தொழிலுக்கு குளங்களில் இருந்து மண் எடுக்க அரசு இலவச அனுமதி வழங்கியுள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே மண்பாண்ட தொழிலை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளி ஆறுமுகசெல்வன் கோரிக்கை விடுத்துள்ளார்.