தூத்துக்குடியில் துணிகரம் சித்தா டாக்டர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பணம் கொள்ளை மர்ம நபருக்கு வலைவீச்சு

தூத்துக்குடியில் சித்தா டாக்டர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-12-29 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் சித்தா டாக்டர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சித்தா டாக்டர்

தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடே‌‌ஷ்(வயது 50). சித்தா டாக்டர். இவர் தனது வீட்டில் சித்தா மருந்துகளும் தயாரித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள வேறு வீட்டுக்கு மாறிவிட்டார். இதனால் அந்த வீட்டை மருந்து தயாரிக்கும் இடமாக பயன்படுத்தி வந்தார். அவர் கடந்த 26-ந் தேதி குடும்பத்துடன் பாளையங்கோட்டைக்கு சென்றார்.

கொள்ளை

நேற்று மாலையில் அவர் வீட்டுக்கு திரும்பினார். இந்த நிலையில் மருந்து தயாரிக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அங்கு இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.1½ லட்சம் பணம், ரூ.60 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 4 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை யாரோ மர்ம நபர் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகா‌‌ஷ், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து அந்த வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்