தனுஷ்கோடி கடலில் குளித்த கல்லூரி மாணவர் மாயம் - தேடும் பணி தீவிரம்

தனுஷ்கோடி கடலில் குளித்த கர்நாடகாவை சேர்ந்த கல்லூரி மாணவர் மாயமானார். அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Update: 2019-12-29 22:15 GMT
ராமேசுவரம்,

கர்நாடக மாநிலம், சித்திரதுர்கா மாவட்டம், கஜதுர்கா பகுதியில் இருந்து 2 பஸ்களில் 100 பேர் ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்றனர். அப்போது கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் ராஜ் பிரஜ்வால்(வயது 18) என்பவர் மேலும் சில வாலிபர்களுடன் கடலில் இறங்கி குளித்தார். அப்போது அவர் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமேசுவரம் தீயணைப்பு துறையினரும், மரைன் போலீசாரும் அங்கு சென்று மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் ராட்சத அலைகள் சீறிப்பாய்கின்றன. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் உள்பட யாரும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, போலீசாரால் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது.

அதையும் மீறி சிலர் ஆர்வ மிகுதியால் ஆபத்தை உணராமல் கடலுக்குள் இறங்கி குளிக்கின்றனர். தனுஷ்கோடி கடலில் குளிக்கும் நபர்கள் இதுபோன்று கடலுக்குள் இழுத்துச்செல்லப்படுவது அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்