போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 1,115 லிட்டர் சாராயம் தீ வைத்து அழிப்பு
பல்வேறு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 1,115 லிட்டர் சாராயம் தீ வைத்து அழிக்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் சாராயம் விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தல் தொடர்பாக நடப்பாண்டில் மொத்தம் 1,115 லிட்டர் சாராயத்தை மது விலக்கு அமல்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரமாகும். பறிமுதல் செய்யப்பட்ட இந்த சாராயம் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக கேன்களில் வைக்கப்பட்டிருந்தது.
இவற்றை அழிப்பதற்கு அனுமதி கேட்டு திண்டிவனம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து சாராயத்தை அழிப்பதற்கு கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சாராய கேன்களை நேற்று விழுப்புரம் அருகே பிடாகத்தில் உள்ள தென்பெண்ணையாற்றுக்கு போலீசார் எடுத்துச்சென்றனர். பின்னர் திண்டிவனம் நீதிபதி நளினிதேவி முன்னிலையில் போலீசார் அந்த சாராயத்தை ஆற்றின் கரையோரத்தில் கீழே கொட்டி தீவைத்து அழித்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் பலர் உடன் இருந்தனர்.