தர்மபுரி மாவட்ட மலைக்கிராமங்களுக்கு கழுதைகள் மீது எடுத்து செல்லப்பட்ட ஓட்டுப்பெட்டிகள்

உள்ளாட்சி தேர்தலையொட்டி தர்மபுரி மாவட்ட மலைக்கிராமங்களுக்கு கழுதைகள் மீது ஓட்டுப்பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன.

Update: 2019-12-29 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட வட்டுவனஅள்ளி ஊராட்சியில் கோட்டூர் மலை, ஏரிமலை, அலகட்டு மலை என 3 மலைக்கிராமங்கள் உள்ளன. இதில் கோட்டூர் மலையில் ஒரு வாக்குச்சாவடியில் 341 வாக்குகளும், ஏரிமலையில் ஒரு வாக்குச்சாவடியில் 372 வாக்குகளும் உள்ளன. ஏரிமலையில் உள்ள வாக்குச்சாவடியில் அலகட்டு மலைக்கிராமத்தை சேர்ந்தவர்கள் வந்து வாக்கு அளித்து வருகின்றனர். இந்த 3 மலை கிராமங்களுக்கும் சாலை, போக்குவரத்து வசதி இல்லை.

இங்குள்ள மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பாலக்கோட்டுக்கு வந்து வாங்கி செல்கின்றனர். மலைப்பகுதி என்பதால் கரடு, முரடான சாலையில் பொருட்களை எடுத்து செல்ல இவர்கள் கழுதைகளை பயன்படுத்தி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நேரங்களில் ஏரிமலை, கோட்டூர் மலைப்பகுதிகளில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் கழுதைகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.

கழுதைகளில் சென்ற ஓட்டுப்பெட்டிகள்

இந்த நிலையில் பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) 2-ம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மலைக்கிராமங்களில் உள்ள 2 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான ஓட்டுப்பெட்டிகள் உள்ளிட்ட வாக்குப் பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் சாக்குப்பையில் வைத்து கட்டப்பட்டன.

பின்னர் அவைகள் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் கோட்டூர் மலை, ஏரிமலை அடிவார பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

பின்னர் 2 இடங்களில் இருந்தும் தலா 5 கழுதைகள் வீதம் மொத்தம் 10 கழுதைகள் மீது வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் ஏற்றி மலை கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. கழுதைகளுக்கு பின்னால் கரடு, முரடான பாதையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் 6 போலீசார், 20 வாக்குச்சாவடி அலுவலர்கள் நடந்து சென்றனர். இன்று வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மீண்டும் கழுதைகள் மீது வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்