குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் - தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-12-29 22:30 GMT
கோவை, 

கோவை மாநகர மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.நாச்சிமுத்து, குப்புசாமி, குமரேசன், உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கடந்த 60 ஆண்டுகளாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடைமுறையில் இருந்த குடியுரிமை சட்டத்தில் மத்திய பா.ஜனதா அரசு திருத்தம் செய்து உள்ளது. இந்த சட்டம் ஈழத்தமிழர்களுக்கும், சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கும் எதிரானது.

பொருளாதார பின்னடைவு, வேலையின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மக்களின் ஏமாற்றம், கோபத்தை திசைதிருப்புவதற்காகவே இந்த சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. எனவே இந்த சட்டத்தை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்.

கோவை மாநகர பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்ய வெளிநாட்டை சேர்ந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பலமுறை போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன்வராவிட்டால் மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

கோவை மாவட்டம் மற்றும் மாநகர் பகுதியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் குப்பைகள் சரியாக சுத்தம் செய்யப்படவில்லை. அத்துடன் கழிவுநீர் கால்வாய்களும் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி சாலையில் செல்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து காய்ச்சல் வேகமாக பரவுவதை தடுக்க வேண்டும்.

கோவையில் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பாலம், ஹோப் காலேஜ், தண்ணீர் பந்தல் மேம்பாலம், ஆவாரம்பாளையம் ரோடு மேம்பாலம் கட்டும் பணி மெதுவாக நடந்து வருகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுற்றிச்செல்வதால் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த மேம்பால பணிகளை வேகப்படுத்தி விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க கேட்டுக்கொள்வது.

உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடந்தபோது, ஏராளமான பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இந்த பூங்காக்கள் தற்போது பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. அதை பராமரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன், மகுடபதி, தீபா, ராஜராஜேஸ்வரி, பாபு, தீர்மானக்குழு உறுப்பினர் செல்வராஜ், பகுதி செயலாளர் எஸ்.எம்.சாமி, கோவை லோகு, சேதுராமன், சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்