புத்தாண்டு விழா நடத்த அனுமதி வழங்காததால் - போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

திருவொற்றியூரில் புத்தாண்டு விழா நடத்த அனுமதி வழங்காத போலீசாரை கண்டித்து, போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2019-12-29 22:00 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் இந்திரா காந்தி நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு அன்று பெண்கள் மற்றும் வாலிபர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்குவதோடு, இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி வருகிற 2020-ம் ஆண்டு புத்தாண்டு விழாவையும் சிறப்பாக நடத்த இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர். இதற்காக திருவொற்றியூர் போலீசாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் புத்தாண்டு விழா நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை என்று கூறப் படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன்பு ஒன்று கூடினர். புத்தாண்டு விழா நடத்த அனுமதி வழங்காத போலீசாரை கண்டித்து, அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கையில், “காவல்துறையே அனுமதி வழங்கு” என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்றனர்.

இதையடுத்து போலீசார், இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்