கம்மவான்பேட்டையில் 2 வயது பெண் குழந்தையை கொன்று மலையடிவாரத்தில் வீச்சு

கம்மவான்பேட்டையில் 2 வயது பெண் குழந்தையை கொன்று மலையடிவாரத்தில் வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-12-29 22:45 GMT
கணியம்பாடி, 

கண்ணமங்கலத்தில் இருந்து ஆற்காடு செல்லும் ரோட்டில் கணியம்பாடி அருகே கம்மவான்பேட்டை கிராமத்தில் மொட்டை மலை உள்ளது. இந்த மலையின் மீது முருகர் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இக்கோவிலுக்கு செல்லும் பாதை அருகே மலையடிவாரத்தில் உள்ள பள்ளம் ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் சுமார் 2 வயது பெண் குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரகாசிடம் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர் வேலூர் தாலுகா போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குழந்தையை மர்ம நபர்கள் கொலை செய்து மலையடிவாரத்தில் வீசி சென்றது தெரிய வந்தது. அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுவதால் இறந்து 4 நாட்கள் ஆகி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் குழந்தை பிணத்தின் மீது பெரிய பாறாங்கல் கிடந்தது. இதனால் குழந்தையை பாறாங்கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் பிணத்தை அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை யாருடையது? எதற்காக கொலை செய்து மலையடிவாரத்தில் வீசினர்? நரபலி கொடுக்கப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்