கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் மளிகை கடைக்குள் புகுந்தது - தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் பீதி
கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்த கார், மளிகை கடைக்குள் புகுந்தது. தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
கூடலூர்,
கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் கூடலூரில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர ஊட்டிக்கு சென்று திரும்பும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் அதிகளவு இயக்கப்படுகிறது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் வரை செங்குத்தான மலைப்பாதையாக உள்ளது. இதனால் ஊட்டியில் இருந்து வரும் வாகனங்கள் 2-வது கியரில் வர வேண்டும் என போக்குவரத்து போலீசார் சீசன் காலங்களில் டிரைவர்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.
பெரும்பாலும் சமவெளி பிரதேசங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை கடைப்பிடிப்பது இல்லை. இதனால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. ஊட்டியில் இருந்து நடுவட்டம் வரை வாகனங்களை இயக்கி வரும் டிரைவர்கள், நடுவட்டத்தில் இருந்து கூடலூர் வரை பள்ளத்தாக்கான சாலையில் கவனமாக ஓட்டுவது இல்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்து கூடலூர் நகருக்குள் வாகன விபத்துகள் தொடர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக சீசன் களை கட்ட வில்லை. இதனால் சுற்றுலா வாகனங்களின் வரத்து குறைவாக இருந்தது.
தற்போது தொடர் விடுமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் வாகனங்களும் அதிகளவு செல்கிறது. இதற்கு ஏற்ப கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்களால் கூடலூரில் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பேரணி நடைபெற்றது. இதனால் கூடலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் மக்கள் கூட்டம் திரண்டு காணப்பட்டது.
அப்போது ஊட்டியில் இருந்து வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பொதுமக்கள் கூட்டத்துக்குள் சென்றது. இதனால் அலறி அடித்தவாறு அனைவரும் ஓட்டம் பிடித்தனர். மேலும் அதிர்ஷ்டவசமாக சாலையோர நடைபாதையில் மோதி கார் நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கடந்த காலங்களில் கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் மோதி சாலையோரம் நடந்து சென்ற பொதுமக்கள் பலத்த காயம் அடைந்துள்ள சம்பவங்களும் நடைபெற்று உள்ளது. கூடலூர் ராஜகோபாலபுரம் முதல் பழைய பஸ் நிலையம் வரை பல லட்சம் செலவில் நகராட்சி நிர்வாகம் இரும்பு தடுப்புகள் வைத்திருந்தது. ஆனால் இரவோடு இரவாக இரும்பு தடுப்புகளை சமூக விரோதிகள் அகற்றினர்.
இதனால் நடைபாதைகளில் செல்லும் பொதுமக்கள், பாதுகாப்பு இல்லாத சூழலில் நடக்கின்ற நிலையை காண முடிகிறது. மேலும் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்களை தடுக்க இரும்பு தடுப்புகளும் இல்லாததால் வணிக நிறுவனங்களுக்குள் வாகனங்கள் செல்லும் நிலை தொடர்கிறது. கடந்த வாரம் 21-ந் தேதி ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூருக்கு புறப்பட்டு சென்ற கர்நாடகா அரசு பஸ்சின் முன்பக்க 2 டயர்கள் திடீரென பஞ்சர் ஆனது. இதனால் பழைய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சாலையின் நடுவில் சிமெண்டு தடுப்பு சுவர்கள் வரிசையாக அடுக்கி வைத்துள்ளதால் விபத்து காலங்களில் வாகனங்களை திருப்பி விட முடியாமல் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஊட்டியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுற்றுலா பஸ் கூடலூர் அக்ரஹாரம் பகுதியில் நடுரோட்டில் திடீரென பஞ்சராகி நின்றது. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சாலையின் மறுபுறம் பிற வாகனங்களை அனுப்பி வைத்தனர். பின்னர் பஸ் டிரைவர் பழுதடைந்த டயரை கழட்டி விட்டு வேறு டயர் பொருத்தினர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சுற்றுலா பஸ் அங்கிருந்து ஓட்டி செல்லப்பட்டது.
ஆனால் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கூடலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் வேகமாக வந்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் உள்ள மளிகை கடைக்குள் புகுந்தது. இதனால் கடையின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. சிறிது நேரம் கார் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுபோன்று சுற்றுலா சீசன் களை கட்டும் நேரங்களில் கூடலூரில் தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.