நாட்டின் 2-வது தனியார் ரெயில் சேவை 17-ந் தேதி தொடக்கம் மும்பை- ஆமதாபாத் இடையே இயக்கப்படுகிறது

நாட்டின் 2-வது தனியார் ரெயில் சேவை மும்பை- ஆமதாபாத் இடையே ஜனவரி 17-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

Update: 2019-12-28 22:52 GMT
மும்பை, 

நாட்டின் 2-வது தனியார் ரெயில் சேவை மும்பை- ஆமதாபாத் இடையே ஜனவரி 17-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

தேஜஸ் ரெயில் சேவை

டெல்லி- லக்னோ இடையே நவீன வசதிகளை கொண்ட தேஜஸ் என்ற தனியார் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. இழப்பீடு வழங்கும். இதன் 2-வது தனியார் ரெயில் மும்பை- ஆமதாபாத் இடையே அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதன்படி இந்த ரெயில் மும்பை- ஆமதாபாத் இடையே ஜனவரி 17-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. தொடக்க நாள் அன்று இந்த ரெயில் ஆமதாபாத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 4 மணிக்கு மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடையும். பின்னர் மாலை 5.15 மணிக்கு இங்கு இருந்து புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு ஆமதாபாத் சென்றடையும்.

ஜனவரி 19-ந்தேதி முதல் மும்பை- ஆமதாபாத் தேஜஸ் ரெயிலின் வழக்கமான சேவை தொடங்கப்படும். தினமும் (வியாழக்கிழமை தவிர) காலை 6.40 மணிக்கு ஆமதாபாத்தில் இருந்து புறப்படும் ரெயில் மதியம் 1.10 மணிக்கு மும்பை சென்ட்ரல் வந்தடையும்.

பிறகு பிற்பகல் 3.40 மணிக்கு மும்பை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு இரவு 9.55 மணிக்கு ஆமதாபாத் சென்றடையும்.

பல்வேறு வசதிகள்...

தேஜஸ் ரெயில் குறித்து மேற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ரவீந்திர பாகர் கூறுகையில், ‘‘முழுவதும் குளிரூட்டப்பட்ட தேஜஸ் ரெயிலில் பல நவீன வசதிகள் உள்ளன. தானியங்கி கதவுகள், தனிநபர் புத்தகம் படிக்கும் விளக்குகள், செல்போன் சார்ஜர், பட்டனை அழுத்தி உதவியாளரை அழைக்கும் வசதி, கண்காணிப்பு கேமராக்கள், சொகுசு இருக்கைகள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளது’’ என்றார்.

மேற்கண்ட இரண்டு தேஜஸ் ரெயில்களும் தனியார் நிர்வாகத்தால் வெள்ளோட்ட அடிப்படையில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்