துறைமுக வளாகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கியது எப்படி? கவர்னர் கிரண்பெடி கேள்வி

துறைமுக வளாகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கியது எப்படி? என்று கவர்னர் கிரண்பெடி கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2019-12-28 23:15 GMT
புதுச்சேரி,

புதுவையில் புத்தாண்டை கொண்டாட ஓட்டல்கள் தயாராகி வருகின்றன. இதற்கிடையே துறைமுக வளாகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு துறைமுக துறையிடம் 2 நிறுவனங்கள் அனுமதி பெற்றுள்ளன. இதையொட்டி மது விருந்து உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள லாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் விற்பனையும் தொடங்கியுள்ளது.

அனுமதி ரத்து

ஆனால் தீயணைப்புத் துறை, நகராட்சி போன்றவற்றிடம் அனுமதி பெறவில்லை. அவ்வாறு அனுமதி பெறாமல் காவல்துறையிடம் அனுமதிக்காக விண்ணப்பித்தது. சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுமதி பெறாததாலும், இரு நிறுவனங்கள் ஒரே இடத்தில் நிகழ்ச்சி நடத்துவதாலும் பிரச்சினை ஏற்படும் என்பதால் அதனை ரத்து செய்ய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் குறிப்பாணை வெளியிட்டுள்ளார்.

இதற்கான டிக்கெட் விற்பனையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அங்கீகரிக்கப்படவில்லை

இந்த குறிப்பாணையை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கவர்னர் கிரண்பெடி, இந்த புத்தாண்டு கொண்டாட்டம் காவல் துறையினரால் அங்கீகரிக்கப்படவில்லை. இதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் ஒப்புதல் இல்லாமல் துறைமுகத்துறை அனுமதி வழங்கியது தொடர்பாக துறைமுகத்துறை செயலாளர் அறிக்கை அளிக்குமாறு கேட்டுள்ளதாகவும், அதற்கு காரணம் யார்? இதுபோன்ற நிகழ்வுகள் புத்தாண்டு தினத்தன்று சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக்கூடும் என்றும் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்