திருப்பாவை- திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

நெல்லையப்பர் கோவிலில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் ேபாட்டி நேற்று நடந்தது.

Update: 2019-12-28 22:00 GMT
நெல்லை. 

நெல்லையப்பர் கோவிலில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் ேபாட்டி நேற்று நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி

இந்துசமய அறநிலையத்துறை நெல்லை மண்டலம் சார்பில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல், கட்டுரை போட்டி நேற்று காலை நெல்லையப்பர் கோவிலில் தொடங்கியது. மார்கழி மாதத்தையொட்டி இந்த போட்டிகள் நடத்தப்பட்டது.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டியில் திருப்பாவையில் 1 முதல் 5 பாசுரங்கள் அல்லது திருவெம்பாவையில் 1 முதல் 5 பாசுரங்கள், கட்டுரைப்போட்டியில் மாலனும் மார்கழியும் அல்லது திருவெம்பாவையில் இயற்கை வர்ணனை,

6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டியில் திருப்பாவையில் 1 முதல் 10 பாசுரங்கள் அல்லது திருவெம்பாவையில் 1 முதல் 10 பாசுரங்கள், கட்டுரை போட்டியில் ஆண்டாள் பாசுரங்களில் வானியல் பார்வை அல்லது மாணிக்கவாசகர் பாசுரங்களில் ஐம்பூதங்களும் அரனும்,

9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டியில் திருப்பாவையில் 1 முதல் 20 பாசுரங்கள் அல்லது திருவெம்பாவையில் 1 முதல் 20 பாசுரங்கள், கட்டுரை போட்டியில் கண்ணன் காதலில் ஆண்டாளும், பாரதியும் ஓர் ஒப்பீடு அல்லது உறக்கத்தை உவமைப்பொருளாக்கி மாணிக்கவாசகர் சொல்லும் செய்தி என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது.

ஒப்புவித்தல் போட்டியில் 187 பேரும், கட்டுரை போட்டியில் 60 பேரும் என மொத்தம் 247 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

மாலையில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் சங்கர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் நாராயணன், செயல் அலுவலர்கள் ராம்குமார், ராஜேந்திரன், ஆய்வாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்