இடையார்பாளையம், தானாம்பாளையம் கிராமங்களில் கிரண்பெடி ஆய்வு உயர் அதிகாரிகள் வராததால் அதிருப்தி

இடையார்பாளையம், தானாம்பாளையம் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட கவர்னர் கிரண்பெடி, உயர் அதிகாரிகள் வராததால் அதிருப்பதி அடைந்தார்.

Update: 2019-12-28 23:00 GMT
பாகூர்,

புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக சென்ற ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, மணவெளி தொகுதிக்குட்பட்ட இடையார்பாளையம் கிராமத்திற்கு நேற்று சென்றார்.

அங்குள்ள எல்லையம்மன் கோவில் பக்கத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மின் இணைப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்படாமல் இருப்பது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

தொடர்ந்து, அங்குள்ள புலியஞ்சாலையில் 2005-ம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது பயன்படாமல் இருக்கும் பொது கழிப்பிடத்தையும் கவர்னர் பார்வையிட்டார். அதனை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சமுதாய நலக்கூடத்தை முறையாக பயன்பாட்டிற்கு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல், தவளக்குப்பம் அடுத்துள்ள தானாம்பாளையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார். அப்போது, அந்த கட்டிடத்திலும், மின் இணைப்பு மற்றும் பாதை அமைக்கப்படாமல் இருப்பது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.

அதிருப்தி

ஆய்வின்போது உயர் அதிகாரிகள் வராத நிலையில், கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளின் பதிலை ஏற்க மறுத்து, அதிருப்பதி அடைந்தார். பின்னர் கவர்னர் கிரண்பெடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்