பணகுடியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது 27 பவுன் நகைகள் மீட்பு

பணகுடியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 27 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.;

Update: 2019-12-28 21:30 GMT
பணகுடி, 

பணகுடியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 27 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

நெல்லை மாவட்டம் பணகுடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மொபட்டில் சென்ற எல்.ஐ.சி. முகவர் ஆவரைகுளத்தை சேர்ந்த ஆனந்தி என்ற பெண்ணை, மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த மர்மநபர்கள் வழிமறித்து 15 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், பணகுடி இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, சப்-இன்ஸ்பெக்டர் ஆன்டோ பிரதீப், பழவூர் சப்-இன்ஸ்பெக்டர் அருண் ராஜா ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கூடங்குளம் வைராவிகிணறு பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் அஜித்குமார் (வயது 21), அவரது கூட்டாளிகள் லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த வேல்சாமி மகன் மாரிச்செல்வம் (20) மற்றும் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த 2 பேர் என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரும் வைராவிகிணறு டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

4 பேர் கைது

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 27 பவுன் தங்க நகைகளை மீட்டு, 2 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைத்தனர். மேலும் அவர்கள் மீது நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்