கோவையில் மாணவி பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது

கோவையில் மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-28 23:00 GMT
கோவை,

கோவையில் கடந்த மாதம் 26-ந் தேதி பிளஸ்-1 மாணவி ஒருவர், 19 வயது ஆண் நண்பருடன் இரவில் ஒரு பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராகுல் (வயது 21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயணமூர்த்தி (30), மணிகண்டன் (25), கார்த்திக் (27) ஆகியோர் திடீரென்று அந்த மாணவியின் ஆண் நண்பரை தாக்கினார்கள்.

பிறகு அவர்கள் அந்த மாணவியின் வாயை பொத்தி பூங்காவுக்கு வெளியே கடத்திச்சென்று மறைவான இடத்தில் வைத்து பலாத்காரம் செய்தனர். அதை செல்போனில் வீடியோவும் எடுத்தனர். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பினார்கள்.

இதுகுறித்த புகாரின்பேரில் கோவை மேற்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன் உள்பட 6 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிறகு அவர்கள் 6 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் வடவள்ளி தில்லை நகரை சேர்ந்த மற்றொரு மணிகண்டனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வடவள்ளி தில்லை நகர் பகுதி யில் பதுங்கி இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்