பெண்ணாடம் அருகே பரபரப்பு: அரசு பள்ளிக்கு வந்த அரிசி மூட்டைகளை வீட்டில் இறக்கிய சத்துணவு பொறுப்பாளர் - சப்-கலெக்டர் எச்சரிக்கை
பெண்ணாடம் அருகே அரசு பள்ளிக்கு வந்த அரிசி மூட்டைகளை தனது வீட்டில் சத்துணவு பொறுப்பாளர் இறக்கி வைத்தார். இந்த நிலையில் அந்த வழியாக சென்ற சப்-கலெக்டர்அவரை எச்சரிக்கை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெண்ணாடம்,
விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார் நேற்று, தனது காரில் பெண்ணாடத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முருகன் குடியில் சென்ற போது, அங்கு சாலையோரமாக நின்ற லாரியில் இருந்து தொழிலாளர்கள் மூட்டைகளை இறக்கி கொண்டிருந்தனர்.
இதை பார்த்த சப்-கலெக்டர் பிரவீன்குமார் சந்தேகத்தின் பேரில், தனது காரை நிறுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த தொழிலாளர்களிடம் கேட்ட போது, லாரியில் கொண்டு வரப்பட்டது சத்துணவுக்கு பயன்படுத்தப்படும் அரிசி மற்றும் பச்சை பயிறு மூட்டைகள் என்பதும், அதை அருகில் உள்ள கபிலன் என்பவரது வீட்டில் இறக்கி வைப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சப்-கலெக்டர் பிரவீன்குமார், அந்த வீட்டுக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை ேமற்கொண்டார். அதில் கபிலனின் மனைவி கலையரசி (வயது 34), காரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வருவது தெரியவந்தது. மேலும் அவர் பணிபுரியும் பள்ளிக்கு சத்துணவுக்காக லாரியில் அரிசி மற்றும் பச்சை பயிறு மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
சத்துணவுக்காக வழங்கப்பட்ட பொருட்களை ஏன் பள்ளியில் இறக்காமல் உங்களது வீட்டில் இறக்குகிறீர்கள் என்று கலையரசியிடம் சப்-கலெக்டர் பிரவீன்குமார் விசாரணை மேற்கொண்டார்.
அதில், காரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில் உள்ள கட்டிடம் பலத்த சேதமடைந்து உள்ளதால், அரிசி மற்றும் பச்சைபயிறு மூட்டைகளை தனது வீட்டில் இறக்கி வைத்ததாக கலையரசி கூறினார். அதைகேட்ட சப்-கலெக்டர் பிரவீன்குமார் அரசுக்கு சொந்தமான இதுபோன்ற பொருளை அரசு கட்டிடத்தில் தான் வைக்கவேண்டும். இது போன்று தனிநபர் வீட்டில் வைக்கக்கூடாது என கூறி அவரை எச்சரிக்கை செய்தார். மேலும் அவர், இது குறித்து உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து கலையரசி வீட்டில் இறக்கிவைக்கப்பட்ட மூட்டைகளை மீண்டும் லாரியில் ஏற்றி அதனை விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்ப அவர் நடவடிக்கை மேற்கொண்டார்.
பள்ளி கட்டிடம் சேதம் என்று கூறி சத்துணவு பொறுப்பாளர் தனது வீட்டில் அரிசி மூட்டைகளை இறக்கி வைத்தாலும், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதால், இதன் முடிவிலேயே அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.