குரும்பூர் அருகே பெண் வேட்பாளர் படத்தை ஆபாசமாக சித்தரித்து பரப்பிய தொழிலாளி கைது
குரும்பூர் அருகே வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தென்திருப்பேரை,
குரும்பூர் அருகே வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஆபாசமாக சித்தரிப்பு
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே மயிலோடை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள் மகன் கலைச்செல்வன் (வயது 30), சுப்பையா மகன் வடிவேல் முருகன் (36). இவர்கள் இருவரும் கூலி தொழிலாளர்கள்.
இவர்கள் ஊரக உள்ளாட்சி அமைப்புக்கான முதல்கட்ட தேர்தலில் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது.
கைது
இதுகுறித்த புகாரின் பேரில், குரும்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக கலைச்செல்வனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான வடிவேல் முருகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குரும்பூர் அருகே பெண் வேட்பாளரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பிய தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.