பவானிசாகர் அணை 3-வது முறையாக முழு கொள்ளளவை நெருங்குகிறது

பவானிசாகர் அணை 3-வது முறையாக முழு கொள்ளளவை நெருங்குகிறது.

Update: 2019-12-28 22:15 GMT
பவானிசாகர், 

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணையாகும். இந்த அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மாயாறும் நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளது.

அணை மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்டதாகும். இதில் சகதி 15 அடி போக கொள்ளளவு 105 அடியாக கணக்கிடப்படுகிறது.

இந்த ஆண்டு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்த காரணத்தால் பவானிசாகர் அணை கடந்த அக்டோபர் மாதம் தொடர்ந்து 2-வது ஆண்டாக 102 அடியை எட்டியது.

அதன்பின்னர் கடந்த மாதம் 8-ந் தேதி இரவு 11 மணி அளவில் அணை 2-வது முறையாக முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து மேல் மதகு மூலம் உபரி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.

அதேநேரம் அணை கடந்த 30-ந் தேதி வரை தொடர்ந்து 22 நாட்களாக 105 அடியை கொண்டிருந்தது. இந்த நிலையில் வெப்ப சலனத்தின் காரணமாக அணையின் நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது. மாலை 4 மணிக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 422 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 104.64 அடியாக உயர்ந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஆண்டில் 3-வது முறையாக அணை முழு கொள்ளளவான 105 அடியை தொடும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்