தேர்தல் பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.;

Update: 2019-12-28 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தேர்தல் பணிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் பஞ்சாயத்து யூனியன்களுக்கு நாளை (திங்கட்கிழமை) 2-வது கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக 994 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

2-ம் கட்ட வாக்குப்பதிவு பணிகள் மேற்கொள்வதற்கு வாக்குப்பதிவு அலுவலர்களாக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்ந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ள அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களில் தவறாமல் ஆஜராகி வாக்குப்பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நடவடிக்கை

அதேபோல் வருகிற 2-ந்தேதி வாக்கு எண்ணும் பணி நடக்க உள்ளது. அந்த பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ள அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் தவறாமல் ஆஜராகி வாக்கு எண்ணும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆஜராகவில்லையென்றால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்