நாகை மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

நாகை மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.;

Update: 2019-12-28 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நடந்த முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 75.74 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்த இடங்களில் இருந்து வாகனங்கள் மூலம் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

நாகை ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் நாகை அமிர்தானந்தா பள்ளியிலும், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் கீழ்வேளூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் சீர்காழி விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியிலும், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியிலும், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் புத்தூர் பாலிடெக்னிக் மற்றும் சீனிவாசன் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமரா

இதையடுத்து வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. இந்த அறையின் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பெட்டி வைக்கபட்டுள்ள அறையை கண்காணிக்க 10-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் 1 துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2 இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 20 போலீசார் மற்றும் 2 வெடிகுண்டு நிபுணர்கள் என 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

நாகை மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதை தவிர 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சோதனை செய்வதற்கு என்று ரோந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மொத்தம் 6 வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் கம்புகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்