தூத்துக்குடியில் பயங்கரம்: 4 மாத ஆண் குழந்தை கிணற்றில் வீசி கொலை உறவுக்கார பெண் கைது

தூத்துக்குடியில் 4 மாத ஆண் குழந்தை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டது. இதுதொடர்பாக உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-12-28 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் 4 மாத ஆண் குழந்தை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டது. இதுதொடர்பாக உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

4 மாத குழந்தை

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு முல்லைநகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 25). இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நந்தினி (20). இவர்களுக்கு 4 மாதத்தில் செல்வகணே‌‌ஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது.

நந்தினி வீட்டின் முன்பக்கம் கிணறு ஒன்று உள்ளது. நேற்று காலையில் செல்வராஜ் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் குழந்தை தூங்கி கொண்டு இருந்தது. அப்போது வீட்டில் நந்தினி, அவருடைய அக்காள் உமா மகேசுவரி ஆகியோர் இருந்தனர்.

பிணமாக மீட்பு

இந்த நிலையில் மதியம் 1 மணிக்கு வீட்டுக்கு வெளியே ஓடி வந்த நந்தினி, குழந்தை கிணற்றில் விழுந்து விட்டதாக கூறி கூச்சலிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக தூத்துக்குடி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும், கிணற்றில் இருந்து குழந்தையை பிணமாக மீட்டனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

கிணற்றில் வீசி கொலை

4 மாத குழந்தை கிணற்றில் தானாக தவறி விழ வாய்ப்பு இல்லை. எனவே, குழந்தையை யாராவது கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்து இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து நந்தினியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரது உறவுக்கார பெண்ணான தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தை சேர்ந்த பாலாஜி மனைவி பஞ்சவர்ணம் (31) குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்