2 மணி நேரம் காத்திருக்க வைத்ததால் தபால் ஓட்டுப்போட வந்த ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதம்

உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் தபால் ஓட்டுப்போட 2 மணி நேரம் காத்திருக்க வைத்ததால் தேர்தல் அலுவலர்களுடன், ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-28 22:30 GMT
உத்தமபாளையம், 

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு 2-ம் கட்டமாக நாளை (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மொத்தம் 94 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் ஆசிரியர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் உள்பட 519 பேர் தேர்தல் பணியாற்ற உள்ளனர். மேலும் உத்தமபாளையம் ஒன்றிய பகுதியில் வசிக்கும் ஆசிரியர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் 217 பேர் வேறு ஒன்றிய பகுதிகளுக்கு தேர்தல் பணிக்கு செல்கின்றனர். இதனால் அவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கு ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் வந்து வாக்குச்சீட்டு பெற்று கொண்டு தபால் ஓட்டு போட வேண்டும். அதன்படி நேற்று ஒன்றியஅலுவலகத்தில் தபால் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு தேர்தல் பணிக்கு செல்லும் அலுவலர்கள் தபால் ஓட்டு போடுவதற்கு வந்தனர்.

தபால் ஓட்டுப்போட ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அலுவலகத்தில் குவிந்தனர். அப்போது அலுவலகத்தில் தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகள் மற்றும் உறுதி மொழி சான்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தும் அலுவலர் கையொப்பம் இல்லை. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆசிரியர்கள், போலீஸ்காரர்கள் ஓட்டு போடுவதற்கு நீண்டவரிசையில் காத்திருந்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் தேர்தல் அதிகாரிகள், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி ஞானதிருப்பதி வாக்குச்சீட்டில் கையொப்பம் இட்டு வழங்கினார். பின்னர் அமைதியாக தபால் ஓட்டு செலுத்திவிட்டு ஆசிரியர்கள் சென்றனர்.

மேலும் செய்திகள்