மகன் இறந்ததால் விதவையான மருமகளுக்கு மறுமணம் செய்துவைத்த பெண் சிவமொக்காவில் உருக்கமான சம்பவம்

சிவமொக்காவில் மகன் இறந்ததால் விதவையான மருமகளுக்கு மாமியாரே மறுமணம் செய்துவைத்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.

Update: 2019-12-28 23:30 GMT
பெங்களூரு, 

சிவமொக்காவில் மகன் இறந்ததால் விதவையான மருமகளுக்கு மாமியாரே மறுமணம் செய்துவைத்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.

மாமியார்-மருமகள்

பொதுவாக குடும்பத்தில் மாமியார், மருமகள் இடையே இணக்கமான உறவு இருப்பதில்லை. இதை கண்கூடாக தினமும் பார்க்கலாம். அத்துடன் மருமகளுடன் சண்டை, வரதட்சணை கொடுமை, கணவன்-மனைவி இடையே மோதல் ஆகியவை மாமியார்களால் ஏற்படுவதாக தினமும் செய்திகளை கேள்விபட்டு வருகிறோம். இதற்கு விதிவிலக்காக சில மாமியார்-மருமகள்களும் உள்ளனர் என்பது மறுப்பதற்கு இல்லை.

அதுபோல் கர்நாடக மாநிலத்தில் மருமகளை மெச்சும் மாமியார் பற்றி தான் இங்கே பார்க்க போகிறோம்...

மகன் மரணம்

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா மாருதிபுரா கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி லோலாக்‌ஷி. இந்த தம்பதியின் மகன் மஞ்சுநாத். அதுபோல் சிவமொக்கா தாலுகா அனந்தபூர் அருகே ஹிரகரகா கிராமத்தை சேர்ந்தவர் வீனா (வயது 22). மஞ்சுநாத்துக்கும், வீனாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதியின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. ஆனால் திருமணமான 2 ஆண்டில் அவர்களது வாழ்க்கையில் விதி விளையாடியது. இதனால் மகிழ்ச்சியாக சென்ற மஞ்சுநாத்-வீனா வாழ்க்கையில் சோகம் கரைபுரண்டது. மஞ்சுநாத்திற்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதற்கு மத்தியில் வீனா கர்ப்பமானார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மஞ்சுநாத் திடீரென்று மரணமடைந்தார்.

மருமகளுக்கு மாப்பிள்ளை தேடினார்

தனது வாழ்க்கை துணையை இழந்த வீனா வாழ்க்கையில் மனம் உடைந்தார். அவருக்கு ஆறுதலாகவும், தாயாகவும் இருந்து மாமியார் லோலாக்‌ஷி கவனித்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வீனா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு யாஷ்மிக் என பெயர் சூட்டினார். மகன் இறந்த துக்கத்திலும் லோலாக்‌ஷி மருமகள் வீனாவையும், பேரனையும் பாசம் காட்டியதோடு சீராட்டினார்.

மேலும் வாழ்க்கை துணையை இழந்து சிறு வயதிலேயே கஷ்டப்படும் மருமகள் வீனாவை பார்த்து கவலை அடைந்த லோலாக்‌ஷி, வீனாவுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்காக அவரே மாப்பிள்ளை தேடும் படலத்தில் ஈடுபட்டார். அப்போது தான் ஒசநகர் தாலுகா லச்சலகொப்பா அருகே பில்கோடி கிராமத்தை சேர்ந்த கணேஷா என்பவர், விதவையான வீனாவை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்.

திருமணம்

இதற்கு லோலாக்‌ஷியும், வீனாவின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதைதொடர்ந்து லோலாக்‌ஷி தனது மருமகளுக்கு தடபுடலாக திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்தார். கடந்த 22-ந்தேதி சிவமொக்கா அருகே பொன்னநகர் கணபதி கோவிலில் வைத்து கணேஷாவுக்கும், வீனாவுக்கும் திருமணம் நடந்தது.

கணேஷாவுக்கு இது தான் முதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமண நிகழ்ச்சியில் கணேஷா, வீனா, மஞ்சுநாத்தின் குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர் களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

உயர்ந்து நிற்கும் மாமியார்

அத்துடன் மகனை இழந்த துக்கத்திலும் மருமகளுக்கும், பேரனுக்கும் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்த லோலாக்‌ஷியை அனைவரும் பாராட்டிச் சென்றனர். மாமியார்-மருமகள் உறவுக்கு இடையே இன்றைய காலத்தில் பல்வேறு மனஸ்தாபங்கள், மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் விதவை மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்து உயர்ந்து நிற்கும் லோலாக்‌ஷிக்கு நாமும் வாழ்த்து தெரிவிக்கலாமே!

மேலும் செய்திகள்