மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு வந்தபோது பரிதாபம்

திருமானூர் அருகே விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு வந்தபோது மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலியானான்.

Update: 2019-12-28 23:00 GMT
கீழப்பழுவூர்,

திருச்சி மாவட்டம், கல்லகம் கிராமத்தை சேர்ந்தவர்கள் செந்தில்குமார்- ராஜலட்சுமி. இந்த தம்பதியின் மகன்கள் சுபா‌‌ஷ்(வயது 12), சந்தோ‌‌ஷ்குமார்(8). செந்தில்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், ராஜலட்சுமி தனது 2 குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். டால்மியாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சுபா‌‌ஷ் 6-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பள்ளியில் சந்தோ‌‌ஷ்குமார் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால், நேற்று சுபாசும், சந்தோ‌‌ஷ்குமாரும் தாய் ராஜலட்சுமியுடன் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைகூடம் கிராமத்தில் உள்ள அவர்களது தாத்தா மணிவேல் வீட்டிற்கு வந்தனர்.

வீட்டுக்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களிலேயே சுபா‌‌ஷ் தனது தாத்தா, பாட்டியை பார்த்துவிட்டு விளையாடுவதற்காக வீட்டின் மொட்டை மாடிக்கு தனியாக சென்றான். பின்னர் அங்கு விளையாடி கொண்டிருந்தபோது, மொட்டை மாடியின் அருகே பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த மின்கம்பியை சுபா‌‌ஷ் விளையாட்டாக கையில் பிடித்துள்ளான். இதில் மின்சாரம் பாய்ந்து, சிறுவன் சுபா‌‌ஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

கதறி அழுதனர்

சத்தம்கேட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து மாடிக்கு ஓடி சென்றுபார்த்தனர். அப்போது, சுபா‌‌ஷ் மின்சாரம் தாக்கி உடல் கருகிய நிலையில் உயிரிழந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வெங்கனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்