கரூர் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைகளுக்கு `சீல்' வைப்பு

கரூர் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல் நிறைவடைந்ததும் வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டு அந்த அறை களுக்கு `சீல்' வைக்கப்பட்டன. இதனையடுத்து கலெக்டர் அன்பழகன், போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Update: 2019-12-28 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் கரூர், தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய 4 ஒன்றியங்களிலும் நேற்று முன்தினம் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. 4 ஒன்றியங்களிலும் சேர்த்து மொத்தம் 82.54 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. பின்னர் இரவோடு இரவாக வாக்குப்பெட்டிகள் `சீல்' வைக்கப்பட்டு வேனில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டன. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறையான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், பூட்டி `சீல்' வைக்கப்பட்டது. கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வெண்ைணமலையில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு என்.எஸ்.என். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு கொங்கு ஹைடெக் தொழில்நுட்பக்கல்லூரியும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியும் வாக்கு எண்ணும் மையங்களாக உள்ளன.

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஆகியோர் நேற்று, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் மையமான க.பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் மையமான கொங்கு ஹைடெக் தொழில்நுட்பக்கல்லூரியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அடிப்படை வசதிகள் முறையாக...

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் போதிய அளவிலான காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படுவது குறித்து கலெக்டர் கேட்டறிந்து ஆய்வு செய்தார். வாக்கு எண்ணும் நாளன்று வருகை தரும் நபர்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாத வகையில், எந்தெந்த அறைகளுக்கு எந்தெந்த வழிகளில் செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் வகையிலான அறிவிப்பு பலகைகளை ஆங்காங்கே வழிகளில் வைக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்