வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்'

வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அறையில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டு, அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.;

Update: 2019-12-28 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கட்டமாக அன்னவாசல், விராலிமலை, குன்னண்டார்கோவில், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 87 ஆயிரத்து 584 பேர் வாக்களித்து இருந்தனர். இது 80.69 சதவீதம் ஆகும்.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர், ஆயிரத்து 56 வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்பெட்டிகளுக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர் ஓட்டுப்பெட்டிகள் சாக்குப்பையில் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றிய பகுதிகளில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்திற்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஒரு அறையில் ஓட்டுப்பெட்டிகளை வைத்து, அந்த அறையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

இதில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கான ஓட்டுப்பெட்டிகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அன்னவாசல் ஒன்றியத்தில் இலுப்பூர் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியிலும், குன்னண்டார்கோவில் ஒன்றியத்தில் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், கறம்பக்குடி ஒன்றியத்தில் மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், விராலிமலை ஒன்றியத்தில் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஒரு அறையில், ஓட்டுப்பெட்டிகளை வைத்து, அந்த அறையை பூட்டி அந்தந்த பகுதியை சேர்ந்த உதவி தேர்தல் அலுவலர்கள் சீல் வைத்தனர்.

இவ்வாறு வாக்கு எண்ணும் மையத்தில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறையின் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 32 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, அதில் பதிவாகும் காட்சிகளை போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

7 ஒன்றியங்களுக்கு நாளை வாக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீதமுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவான வாக்குகள் வருகிற 2-ந் தேதி எண்ணப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளிட்ட வாக்கு எண்ணும் மையங்களில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்