கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் இடம் மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தனியார் பள்ளி கட்டிடத்திற்கு இடம் மாற்றப்பட்டு செயல்பட தொடங்கியது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தற்காலிகமாக போக்குவரத்து போலீஸ் நிலைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த நிலையில்கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தற்போது கள்ளக்குறிச்சியில் இருந்து சின்னசேலம் செல்லும் தேசியநெடுஞ்சாலையில் பொற்படாக்குறிச்சி கிராம எல்லையில் உள்ள கலைவாணி மெட்ரிக் பள்ளியின் ஒரு பகுதியில் உள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட தொடங்கியது. இதையடுத்து அந்த அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் பணியை தொடங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நிரந்தரமாக சொந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது. அது வரை இந்த கட்டிடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செயல்படும். சமீபகாலமாக கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகவும், மாத சீட்டு நடத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் சில அங்கீகாரம் பெறாத நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளுக்கு அதிக சம்பளத்தில் வேலைக்கு அனுப்புவதாக சில பொய்யான விளம்பரங்கள் மூலமாக அங்கீகாரம் பெறாத ஏஜெண்டுகள் பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். தீபாவளி மற்றும் பண்டிகை கால சீட்டு என்ற பெயரிலும் பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
ஆகவே பொதுமக்கள் இது போன்ற போலி நிதி நிறுவனங்களை நம்பி பணம் கட்டி ஏமாற வேண்டாம். அதே போல் சிலர் அதிக வட்டிக்கு பணம் கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்களிடம் அதிக வட்டிக்கு பணம் கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உரிய அனுமதி பெற்றுதான் வெளிநாடுகளுக்கு ஆள் அனுப்பும் ஏஜென்சி நடத்த வேண்டும். இதை மீறி யாராவது ஏஜென்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கள்ளக்குறிச்சி ராமநாதன், திருக்கோவிலூர் மகேஷ், இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், சுமதி, குமார், எழிலரசி, ரத்னசபாபதி உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.