ஆசாத் மைதானத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் முன்னாள் நீதிபதி பங்கேற்பு
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மும்பை ஆசாத் மைதானத்தில் பல்வேறு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை, டிச.28-
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மும்பை ஆசாத் மைதானத்தில் பல்வேறு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டம்
மும்பை ஆசாத் மைதானத்தில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா இஸ்லாமிய பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவர் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் சோசியல் மாணவர்கள், மும்பை ஐ.ஐ.டி. மாணவர்களும் திரளாக பங்கேற்றனர்.
முன்னாள் நீதிபதி
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் கண்டன பதாகைகளையும் கையில் ஏந்தி இருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மும்பை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி பி.ஜி. கோல்சே, இந்தி நடிகை சவரா பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக மும்பை மாநகராட்சி தலைமை அலுவலகம் உள்ள சாலை முழுவதும் மாணவர்களால் நிரம்பி வழிந்தது. இதனால் சி.எஸ்.எம்.டி. வழியாக மெட்ரோ ஜங்ஷன் வரையில் உள்ள சாலைகளில் இருபுறத்திலும் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஆம்புலன்ஸ் மற்றும் அவசர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.