இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்துக்கள்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் கருத்துக்கு மத்திய மந்திரி அத்வாலே எதிர்ப்பு
இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறிய கருத்துக்கு மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
மும்பை,
இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறிய கருத்துக்கு மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
மோகன் பகவத் பேச்சு
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “இந்த நாட்டில் பிறந்த யாராக இருந்தாலும், அவர்கள் எந்த மொழியை பேசினாலும், எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த வழிபாடுகளை நடத்துபவர்களாக இருந்தாலும், அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தாலும் அவர்கள் இந்துக்கள் தான். அந்த வகையில் இந்த நாட்டின் 130 கோடி மக்களும் எங்களை பொறுத்த அளவில் இந்துக்கள்தான். இவர்களுக்குள் எந்த வேற்றுமையும் கிடையாது. இவர்கள் அனைவருமே பாரதத்தாயின் புதல்வர்கள்” என பேசினார்.
இவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் பாரதீய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதித்துறை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அனைவரும் இந்தியர்கள்
நாம் அனைவரும் இந்தியர்கள், ஒற்றுமையாக உள்ளோம் என கூறியிருந்தால் அதை என்னால் புரிந்துகொள்ள முடியும்.
இங்கு இந்துக்கள் பெரும்பான்மையான சமூகத்தினர். இதை தவிர புத்த சமயத்தினர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளனர். நாம் அனைவரும் ஒன்று, இந்தியர்களாக ஒன்றுபட்டவர்கள் ஆவோம்.
முன்பு ஒரு காலத்தில் புத்த மதம் இந்தியா உள்பட பல நாடுகளில் ஆதிக்கம் செலுத்தியது. அதற்காக நாம் அனைவரும் புத்த மதத்தினர் என கூறமுடியுமா?
இவ்வாறு அவர் கூறினார்.