மும்பை பாந்திராவில் இந்திப்பட நடிகர் தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை

மும்பை பாந்திராவில் இந்திப்பட நடிகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-12-27 23:30 GMT
மும்பை, 

மும்பை பாந்திராவில் இந்திப்பட நடிகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திப்பட நடிகர்

மும்பை பாந்திராவில் செயின்ட் ஆண்ட்ருஸ் ரோட்டில் உள்ள அல்ஸ்டிக் கட்டிடத்தில் வசித்து வந்தவர் குஷால் பஞ்சாபி(வயது42). இந்திப்பட நடிகரான இவர், ‘லக்சயா’, ‘கால்’, ‘சலாமியே இஸ்க்’ உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். மேலும் பல டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது பெற்றோர் போன் செய்தனர். ஆனால் குஷால் பஞ்சாபி போனை எடுத்து பேசவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் தனது மகனின் வீட்டுக்கு பெற்றோர் சென்று பார்த்தனர்.

அப்போது, குஷால் பஞ்சாபி வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குஷால் பஞ்சாபி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கடிதம் சிக்கியது

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் அவரது அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அவர் கைப்பட எழுதி வைத்திருந்த 1½ பக்க கடிதம் சிக்கியது. அதில், எனது சாவுக்கு யாரும் காரணமில்லை என கூறப்பட்டு இருந்தது. மேலும் தனது சொத்துகளை பெற்றோர், மகன், சகோதரி ஆகியோர் பிரித்து கொள்ளும்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தற்கொலை செய்து கொண்ட குஷால் பஞ்சாபிக்கு மனைவி ஆட்ரே டோல்கன், மகன் கியான் ஆகியோர் உள்ளனர். மனைவி அவரை பிரிந்து வெளிநாட்டில் வாழ்வதாக கூறப்படுகிறது. அவரது பராமரிப்பில் மகன் கியான் உள்ளார்.

காரணம் என்ன?

நடிகர் குஷால் பஞ்சாபியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஷால் பஞ்சாபியின் மறைவுக்கு இந்தி திரையுலக நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்