கனகபுராவில் இயேசு கிறிஸ்து சிலை நிறுவும் விவகாரம் அரசு நிலத்தை தானமாக வழங்க முடியாது மந்திரி ஆர்.அசோக் பேட்டி

கனகபுராவில் இயேசு கிறிஸ்து சிலை நிறுவும் விவகாரத்தில் அரசு நிலத்தை தானமாக வழங்க முடியாது என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

Update: 2019-12-27 22:30 GMT
பெங்களூரு, 

கனகபுராவில் இயேசு கிறிஸ்து சிலை நிறுவும் விவகாரத்தில் அரசு நிலத்தை தானமாக வழங்க முடியாது என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

10 ஏக்கர் நிலம்

உத்தரபிரதேசத்தில் போராட்டத்தின்போது, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர் களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் சொத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போல் கர்நாடகத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தவறு செய்தவர்கள் அதற்கான தண்டனையை கட்டாயம் அனுபவிக்க வேண்டும்.

இதுகுறித்து சட்டம் இயற்றப்படும். மங்களூரு கலவரம், முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது என்பது கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும். கனகபுரா தாலுகாவில் கபால மலை பகுதியை மேம்படுத்தும் நோக்கத்தில் அங்கு புறம்போக்கு நிலம், டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது. அதில் 10 ஏக்கர் நிலத்தை அவர், இயேசு கிறிஸ்து சிலை அமைக்க தானமாக வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிக்கை தாக்கல்

அரசின் புறம்போக்கு நிலத்தை ஒரு நோக்கத்திற்காக பெற்றவர்கள், பிறருக்கு தானமாக வழங்க முடியாது. இதுகுறித்து ராமநகர் மாவட்ட கலெக்டருடன் பேசியுள்ளேன். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அவருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

மேலும் செய்திகள்