குறை தீர்க்கும் நாள் கூட்டம்: விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 13 லட்சத்தில் வேளாண் கருவிகள் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்
தென்காசியில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகளை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்.
தென்காசி,
தென்காசியில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகளை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்.
குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணன் பிள்ளை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எஸ்.அசோக்குமார், வேளாண்மை துணை இயக்குனர் நல்லமுத்துராஜா, வேளாண்மை துணை இயக்குனர் (விதை ஆய்வு) டென்னிசன், வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) பாலசுப்பிரமணியன் மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து வேளாண்மை உதவி இயக்குனர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 10 வட்டாரங்களில் உள்ள 10 விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை ஒரு நபருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.4 லட்சம் மானியத்துடன் மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார். மேலும் விசைத்தெளிப்பான் கருவிகள் நபர் ஒருவருக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 10 பேருக்கு ரூ.30 ஆயிரம் மானியத்துடன் வழங்கப்பட்டது.
வேளாண்மை பொறியியல் துறை சார்பாக வட்டார அளவிலான இரண்டு சேவை மையம் அமைக்க ரூ.20 லட்சம் மானியம், கிராம அளவிலான 6 வேளாண் எந்திரங்கள் வாடகை மையம் அமைக்க ரூ.48 லட்சம் மானியம் உள்பட ரூ.1 கோடியே 13 லட்சம் செலவில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நெல் கொள்முதல் நிலையம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஜாகிர் உசேன்:- தென்காசி மாவட்டத்தில் நெற்பயிர் பல ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு உகந்த நிலை ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள் அதிகமாக செலவு செய்து சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் இடைத்தரகர்களின் மோசடியில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் பொருட்டு அரசு நேரடி கொள்முதல் நிலையம் உடனடியாக அமைக்க வேண்டும். பழைய முறைப்படி வடகரை, செங்கோட்டை, கடையநல்லூர், கீழப்புலியூர், புளியங்குடி பகுதிகளில் நிரந்தர அரசு கொள்முதல் நிலையம் மற்றும் நடமாடும் அரசு கொள்முதல் நிலையம் அமைத்து தரவேண்டும்.
உழவர் உற்பத்தியாளர் குழு செயலாளர் இலஞ்சி மாரியப்பன்:- குற்றாலம் கிராம விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.6 ஆயிரம் கிடைக்கவில்லை. அந்த நிதியை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பெரியகுளம் மடையை சீரமைக்க வேண்டும்
முன்னாள் யூனியன் கவுன்சிலர் முருகன் கொடுத்துள்ள மனுவில், செங்கோட்டை தாலுகா இலத்தூர் கிராமத்தில் உள்ள பெரியகுளத்தில் மூன்று மடைகள் ஷட்டர் இல்லாமலும், மூன்று மடைகள் முழுவதுமாக பழுதடைந்து இருப்பதை சீரமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இலத்தூர் முன்னாள் துணைத்தலைவர் சுப்பிரமணியன் கொடுத்த மனுவில் பெரியகுளத்தின் கரை சிமெண்டு கட்டுமானம் பழுதடைந்து உள்ளது. இதில் சிமெண்டு சுவர் கட்டித்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மண்டல செயலாளர் செல்லத்துரை கொடுத்த மனுவில், தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் தென்னையை வருவாய் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.