நெல்லையில் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

நெல்லையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-12-27 21:30 GMT
நெல்லை, 

நெல்லையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், மதரீதியாக மக்களை பிரிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் சார்பில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று அதிகாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை வண்ணார்பேட்டை பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ஜோதி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கோ‌‌ஷம்

நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே உள்ள பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிர்வாகிகள் செய்யது, மணிகண்ட அய்யப்பன், மயில்ராவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட 16 பணிமனைகளில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டை சித்தா கல்லூரி எதிரே உள்ள திடலில் நேற்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொ.மு.ச. மாநில அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் செண்பகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் காசி விசுவநாதன், சடையப்பன், உலகநாதன், எச்.எம்.எஸ். தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன், ஏ.ஐ.சி.சி.டியு. நிர்வாகிகள் ரமே‌‌ஷ், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்