காருவள்ளி வாக்குச்சாவடியில் 2 மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தம் - அதிகாரிகளுடன் தி.மு.க.வினர் வாக்குவாதம்
காருவள்ளி வாக்குச்சாவடியில் 2 மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும் அதிகாரிகளுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்,
ஓமலூர், காடையாம்பட்டி ஒன்றியங்களில் 5 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 34 பேரும், 46 ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு 268 பேரும், 50 ஊராட்சி தலைவர்கள் பதவிக்கு 258 பேரும், 510 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 1,832 பேரும் போட்டியிட்டனர். இவர்களில் சிண்டமங்கலம் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள இடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.
காடையாம்பட்டி ஒன்றியம் காருவள்ளி 12-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் காருவள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை 8 மணி நிலவரப்படி 63 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அப்போது வாக்குச்சீட்டின் பின்புறம் இருந்த அரசு முத்திரை, முன்பகுதியில் இருந்த அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தின் மீது பதிவாகி இருந்தது. இதை பார்த்த தி.மு.க.வினர், இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போட்ட மாதிரி உள்ளது. எனவே வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் என்று கூறினார்கள்.
இது பற்றி தகவல் அறிந்ததும் தி.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் குபேந்திரன் மற்றும் தி.மு.க.வினர், பா.ஜனதா மாவட்ட தலைவர் சவுந்திரராஜன், ஒன்றிய நிர்வாகி பெரியசாமி உள்பட பா.ஜனதாவினர் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். மேலும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த தேர்தல் நடத்தும் அலுவலர் வேடியப்பன், தாசில்தார் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி மற்றும் அதிகாரிகள் தி.மு.க., பா.ஜனதா கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தி.மு.க.வினர் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறும் போது, வாக்குச்சீட்டின் பின்புறம் உள்ள அரசு முத்திரை முன்புறம் உள்ள இரட்டை இலை சின்னம் மீது பதிவாகி உள்ளது. இதில் வாக்காளர்கள் ஓட்டு போடும் போது முத்திரையை பதித்தால் 2 முத்திரை உள்ளது என்று நினைத்து செல்லாத ஓட்டாக மாறி விடும். இது அ.தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ளது என்று குற்றம்சாட்டினர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஏற்கனவே 63 ஓட்டுகள் பதிவான பெட்டியை பூட்டி சீல் வைத்தனர். மேலும் வேறு ஒரு வாக்கு பெட்டியை கொண்டு வந்தனர். பின்னர் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் கூறும் போது, வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் 63 ஓட்டுகள் பதிவான பெட்டி திறக்கப்பட்டு எண்ணப்படும் என்றும், அதில் அரசு முத்திரையை கணக்கில் எடுக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து 10 மணிக்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே போல மணியக்காரனூர் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில், ஓட்டுச்சீட்டுகளில் அரசு முத்திரை, இரட்டை இலை சின்னம் மீது பதிவாகி இருப்பதாக கூறி தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், ஏற்கனவே பதிவான ஓட்டுப்பெட்டிக்கு சீல் வைத்தனர். பின்னர் புதிதாக வேறு ஒரு பெட்டி கொண்டு வரப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு நடந்தது. இதன் காரணமாக மணியக்காரனூர் வாக்குச்சாவடியில் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு நடந்தது.