கரூர் உள்பட 4 ஒன்றியங்களில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 82.54 சதவீதம் வாக்குகள் பதிவு

கரூர் உள்பட 4 ஒன்றியங்களிலும் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 82.54 சதவீதம் வாக்குகள் பதிவானது.

Update: 2019-12-27 22:45 GMT
கரூர், 

தமிழக தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கரூர், தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று தேர்தல் நடந்தது. இதையொட்டி தலைமை வாக்குப்பதிவு அலுவலர் உள்பட வாக்குச்சாவடி அலுவலர்களும் பணிஆணை பெற்று பணிக்கு வந்து, வாக்குச்சாவடியினை தயார்படுத்தினர்.

நேற்று காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் நடந்தது. அதன்பின் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். காலையில் பனியின் தாக்கம் அதிகளவு இருந்ததால் வாக்காளர்களின் வருகை சற்று மந்தமாகவே இருந்தது. பெண்கள், மூதாட்டிகள் உள்ளிட்டோர் ஸ்வெட்டர், குல்லா அணிந்து வாக்கு செலுத்த வந்ததை காண முடிந்தது.

கரூர், தாந்தோணி ஒன்றியங்களை பொறுத்தவரை காலை 6.45 மணிக்கே சில வாக்குச்சாவடி மையங்கள் முன்பு வாக்காளர்கள் வரிசையில் வந்து நின்றதை காணமுடிந்தது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தள்ளி வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்தே வந்தனர். மாறாக மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோரை மட்டும் வாகனங்களிலேயே வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வர போலீசார் அனுமதித்தனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மஞ்சள், ஒன்றியக்குழு உறுப்பினருக்கு பச்சை, கிராம ஊராட்சி தலைவருக்கு இளஞ்சிவப்பு, ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு வெள்ளை ஆகிய 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் தேர்தல் அலுவலர்களால் வழங்கப்பட்டு வாக்குகளை வாக்காளர்கள் செலுத்தினார்கள். காலை நேரத்தில் வயலுக்கு வேலைக்கு சென்ற பெண் தொழிலாளர்கள், வீட்டு வேலையை முடித்து விட்டு குடும்ப பெண்கள் மற்றும் ஆண்கள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் நின்று வாக்கினை செலுத்தி சென்றனர். கரூர் ஒன்றியத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் ஆர்வமாக வாக்களிக்க வந்ததை காணமுடிந்து. வாக்குச்சாவடிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக வரிசை அமைக்கப்பட்டிருந்தது.

வாக்குச்சாவடியின் உள்ளே தலைமை வாக்குப்பதிவு அலுவலரின் மேஜை அருகே வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அங்கு வேட்பாளர்களின் முகவர்களும் அமர்ந்து கொண்டு வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர்.

காலை 11 மணிக்கு மேல் வாக்காளர்கள் அதிகமாக வரத்தொடங்கினர். நேரம் செல்ல செல்ல வாக்குச்்சாவடி மையங்களில் கூட்டம் நிரம்பியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், தேர்தல் பிரிவு அதிகாரிகளும் வரிசையை ஒழுங்குபடுத்தினர். பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

கரூரில் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்த அளவிலேயே இருந்தது. கரூர் அருகே கோயம்பள்ளி அரசு பள்ளியில், செல்லிபாளையத்தை சேர்ந்த 95 வயது மூதாட்டி பாப்பாயிஅம்மாள் சக்கர நாற்காலியில் வந்து வாக்கு செலுத்தினார். இளைஞர்கள் உள்பட பலர் அவர் முன்பு நின்று கொண்டு ஆரவாரத்துடன் செல்பி எடுத்தனர். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்குச்சாவடிகளில் பிரச்சினை ஏதும் ஏற்படுகிறதா? என்பதை கண்காணிக்க கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய 4 ஒன்றியங்களிலும் வாக்காளர்கள் பலர் வாக்களித்து விட்டு வெளியே வந்ததும் தங்களது செல்போனில் செல்பி எடுத்து உடனே வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் பதிவிட்டதை காண முடிந்தது. சிலர் மொத்தமாக குரூப் போட்டோவும் எடுத்து கொண்டனர். மேலும் ஓட்டுப்போட்டதற்கான அடையாளமாக 'மை' வைக்கப்பட்ட விரலை உயர்த்தி காண்பித்து செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் அவைகள் அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் வாக்கு எண்ணும் மைய அறையில் அவை பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வெண்ைணமலையில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு என்.எஸ்.என். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு கொங்கு ஹைடெக் தொழில்நுட்பக்கல்லூரியும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியும் வாக்கு எண்ணும் மையங்களாக உள்ளன.

கரூர் மாவட்டத்தில் கரூர், தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய 4 ஒன்றியங்களிலும் காலை 9 மணி நிலவரப்படி 14.48 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 31.46 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 50.02 சதவீதமும், மதியம் 3 மணி நிலவரப்படி 61.48 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்தது. பின்னர் மாலை 5 மணியளவில் சில இடங்களில் வாக்குப்பதிவு முடிவடைகிற சமயத்தில் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முடிவில் 4 ஒன்றியங்களிலும் சேர்த்து 82.54 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. 4 ஒன்றியங்களையும் சேர்த்து நேற்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 1,00,987 ஆண்கள், 1,10,066 பெண்கள், ஒரு இதர வாக்காளர் என மொத்தம் 2,11,054 பேர் தேர்தலில் வாக்களித்துள்ளனர். முன்னதாக கரூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை கரூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் வெங்கடாசலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்