வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டுடன், இனிப்பு, குளிர்பானங்களை வழங்கி வாக்கு சேகரித்த வேட்பாளர்கள் - போலீசார் விரட்டினர்
வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டுடன் இனிப்பு, குளிர்பானங்களை வழங்கி வாக்கு சேகரித்த வேட்பாளர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், வத்தலக்குண்டு, நத்தம், நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி ஆகிய 7 ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரு சில இடங்களில் சற்று தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அந்தந்த ஒன்றிய பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாக்களித்தனர்.
முன்னதாக வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு வாக்குச்சீட்டுகளுடன் இனிப்பு, குளிர்பானங்களை வழங்கி வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதாவது, வாக்குச்சீட்டு வழங்கும் போதே தங்கள் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கூறினர். அத்துடன் அவர்களுக்கு இனிப்பு, குளிர்பானங்களையும் வழங்கினர். சில இடங்களில் வாக்காளர்களுக்கு பிரியாணியும் வழங்கப்பட்டது. இதற்காக வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில் வேட்பாளர்கள் சார்பில் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன.
ஆனாலும் சில வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், வாக்குச்சாவடிகளுக்கு மிக அருகில் பந்தல்களை அமைத்து அந்த வழியாக வரும் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டுகளுடன், இனிப்பு, குளிர்பானங்களையும் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திண்டுக்கல் திருநகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு வாக்குச்சாவடி அருகே ஒரு வேட்பாளர் தனது சின்னத்துக்கு வாக்குசேகரிக்க நூதன முறையை கையாண்டார். அதாவது, வாக்குச்சாவடிக்கு மிக அருகில் ஒரு சிறுவனை நிறுத்தினார். அவனுடைய கையில் குளிர்பான பாட்டிலை கொடுத்த அவர், அதனை உள்ளங்கையில் பிடித்தபடி நிற்கும்படி கூறினார்.
மேலும் வட்டவடிவமாக கிழிக்கப்பட்ட ஒரு பேப்பரில் தனது சின்னத்தை பதித்து அதை அந்த சிறுவனின் உள்ளங்கையில் வைத்தார். பின்னர் அந்த சிறுவனை, வாக்களிக்க வருபவர்களிடம் குளிர்பானம் கொடுப்பது போல் அந்த சின்னத்தை காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட வைத்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அந்த சிறுவனை அப்புறப்படுத்தினர். அத்துடன் சீலப்பாடி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அருகில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்களையும் விரட்டி அடித்தனர்.