எட்டயபுரம் அருகே பெற்றோர் கண் எதிரே வேன் மோதி சிறுவன் பலி கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்

எட்டயபுரம் அருகே கோவிலுக்கு சென்றபோது, பெற்றோர் கண் எதிரே வேன் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2019-12-27 21:30 GMT
எட்டயபுரம், 

எட்டயபுரம் அருகே கோவிலுக்கு சென்றபோது, பெற்றோர் கண் எதிரே வேன் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

தச்சு தொழிலாளி

தென்காசி மாவட்டம் புளியங்குடி முப்பிடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் (வயது 40). தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி கருமாரி (37). இவர்களுக்கு சுகுமாறன் (7), சக்திவேல் (6) ஆகிய 2 மகன்கள். அங்குள்ள பள்ளியில் சுகுமாறன் 2-ம் வகுப்பும், சக்திவேல் 1-ம் வகுப்பும் படித்தனர்.

நேற்று பரமசிவன் தன்னுடைய மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்களுடன் வேனில் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் மாலையில் அங்கிருந்து தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலைக்கரை கோவிலுக்கு செல்வதற்காக வேனில் வந்தனர்.

கோவிலுக்கு சென்றபோது...

சிந்தலைக்கரை நாற்கரசாலையில் இடதுபுறமாக வேனை நிறுத்தி விட்டு, அனைவரும் நாற்கரசாலையின் குறுக்காக நடந்து கோவிலுக்கு செல்ல முயன்றனர். பரமசிவன் தன்னுடைய மனைவி, மகன்களை அழைத்து கொண்டு கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற வேன் எதிர்பாராதவிதமாக சக்திவேலின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் படுகாயம் அடைந்தான். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவனை பெற்றோரும், உறவினர்களும் மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தான். இறந்த சக்திவேலின் உடலைப் பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

டிரைவருக்கு வலைவீச்சு

விபத்து நிகழ்ந்ததும் வேனை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

எட்டயபுரம் அருகே கோவிலுக்கு சென்றபோது, பெற்றோர் கண் எதிரே வேன் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்