மெஞ்ஞானபுரம் அருகே தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம் பகுதிநேர ரே‌‌ஷன் கடை அமைக்க கோரிக்கை

பகுதிநேர ரே‌‌ஷன் கடை அமைக்க வலியுறுத்தி, தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2019-12-28 03:30 IST
மெஞ்ஞானபுரம், 

பகுதிநேர ரே‌‌ஷன் கடை அமைக்க வலியுறுத்தி, தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் புறக்கணிப்பு

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே தாய்விளை கிராம மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எழுவரைமுக்கி ரே‌‌ஷன் கடையில் சென்று உணவுப்பொருட்களை வாங்கி வந்தனர். இதனால் அப்பகுதி பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதி அடைந்தனர். இதையடுத்து தாய்விளையில் பகுதிநேர ரே‌‌ஷன் கடை அமைப்பதற்கு கிராம மக்கள் மின் இணைப்புடன் கூடிய கட்டிட வசதி, போக்குவரத்து வசதி வழங்க முன்வந்தும், அங்கு பகுதிநேர ரே‌‌ஷன் கடை அமைக்கப்படவில்லை.

இதனைக் கண்டித்து, தாய்விளை கிராம மக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டைகளை திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்தனர். அதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் எழுவரைமுக்கி பஞ்சாயத்து 6-வது வார்டான தாய்விளையில் வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

வெறிச்சோடிய வாக்குச்சாவடி

இந்த நிலையில் நேற்று நடந்த முதல்கட்ட தேர்தலில் 6-வது வார்டான தாய்விளை கிராம மக்கள் வாக்களிப்பதற்காக, பிள்ளைவிளை டி.என்.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதே பள்ளிக்கூட வளாகத்தில் 4, 5-வது வார்டு பகுதி மக்கள் வாக்களிப்பதற்காக, மற்றொரு வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டு இருந்தது.

தாய்விளை கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்குள்ள மொத்த வாக்காளர்கள் 277 பேரில் 7 பேர் மட்டுமே வாக்களித்தனர். இதனால் அந்த வாக்குச்சாவடி வெறிச்சோடி கிடந்தது. மேலும் 6-வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு யாரும் போட்டியிடாததால், அங்கு பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய 3 பதவிகளுக்கு மட்டுமே வாக்களித்தனர்.

தர்ணா போராட்டம்

இதற்கிடையே தேர்தலை புறக்கணித்த தாய்விளை கிராம மக்கள் பகுதிநேர ரே‌‌ஷன் கடை அமைக்க வலியுறுத்தி, தங்களது கிராமத்தின் நுழைவுவாயிலில் காலை முதல் இரவு வரையிலும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறுகையில், பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் எங்களது கோரிக்கையை செவிசாய்க்கவில்லை. எனவே எங்களது ஆதார் அட்டைகளையும் விரைவில் அரசிடம் ஒப்படைத்து விட்டு, சாலைமறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்